5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கான வசதிகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு


5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கான வசதிகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

5-ந் தேதி நடைபெறும் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கான வசதிகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 5-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தஞ்சை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கும்பாபிஷேகத்திற்கு வருபவர்கள் எந்தவித சிரமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று பொதுமக்கள் வந்து செல்வதற்காக தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள், மடாதிபதிகள் வந்து செல்வதற்கும் தனித்தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லா வழிகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமை செயலாளர் ஆய்வு

யாகசாலையில் போலீசார் மட்டுமின்றி தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். தீயை அணைக்கக்கூடிய உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், வாளிகளில் தண்ணீரும் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று ஆய்வு செய்தார். யாகசாலைக்கு சென்ற அவர் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எந்ெதந்த வழியாக யாகசாலைக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. யாகசாலை பந்தலுக்குள் பக்தர்கள் அமரக்கூடிய பகுதி எது? என்பது குறித்து கேட்டறிந்தார்.

யாகசாலைக்கான வரைபடத்தை அவரிடம் காண்பித்து யாகசாலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் விளக்கம் அளித்தார்.

உபகரணங்கள்

யாகசாலையில் எத்தனை இடங்களில் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் கேள்வி எழுப்பியபோது 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் தீயணைப்பு உபகரணங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். பின்னர் மடாதிபதிகள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்பாதையின் வழியாக தலைமை செயலாளர் சண்முகம் பெரியகோவிலுக்குள் சென்றார்.

அங்கு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், மடாதிபதிகள் நிற்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பினால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை பார்வையிட்ட அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையின் வழியாக சென்று பார்வையிட்டார். மேலும் பெரியகோவில் வளாகத்தில் கருவூரார் சன்னதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிநவீன தீயணைப்பு வாகனத்தை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், சிவகங்கை பூங்கா, திலகர் திடலில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதன்மை செயலாளர்

இந்த ஆய்வின்போது தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி, கூடுதல் ஆணையர் திருமகள், கலெக்டர் கோவிந்தராவ், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



Next Story