கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் படகுத்துறை சீரமைக்கும் பணி தீவிரம்
கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் படகுத்துறை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி,
புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தருக்கு 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி நினைவு மண்டபம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி திறக்கப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது தமிழக அரசின் சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய 3 படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காகவும், விவேகானந்த கேந்திரம் மூலம் ஏக்நாத் என்னும் சிறிய வகை படகு நிர்வாக பயன்பாட்டிற்காகவும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகு சேவை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்பட்டு வருவதால், இந்த படகுத்துறையில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். படகு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட போது இங்கு படகுத்துறை கட்டப்பட்டது. அதன் பிறகு இந்த இடத்தில் பெரிய அளவில் எந்த பராமரிப்பு பணிகளும் செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் படகுத்துறை அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டதால், இதன் தரை பகுதி மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் இந்த படகு கட்டும் தளத்தை மாற்றி விட்டு புதிய தளம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து படகுத்துறையை ரூ.1 கோடி செலவில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story