நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தது
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நேற்று அமலுக்கு வந்தது.
நெல்லை,
இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 12 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த திட்டம் ஜூன் மாதம் முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நெல்லை மாவட்டத்தில் நேற்று அமலுக்கு வந்தது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள ரேஷன் கடையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று மாலை தொடங்கி வைத்தார். அவருடன் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
இந்த திட்டத்தில் இதுவரை ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன்கடையில் மட்டும் தான் பொருட்கள் வாங்க முடியும். ஆனால் இந்த புதிய திட்டத்தின் கீழ் எந்த பகுதியை சேர்ந்தவர்களும், தாங்கள் விரும்பிய ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட் கார்டை பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்த உடனே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் ஸ்மார்ட் கார்டை பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்து தங்களுக்கு தேவையான அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 789 ரேஷன் கடைகள் உள்ளன. இதன்மூலம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 206 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இதில் மாஞ்சோலை உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள 6 கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளிலும் ஸ்மார்ட் கார்டை பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்காக பி.ஓ.எஸ். எந்திரத்தில் பொருட்கள் வழங்குவதற்காக பெயர்வு விற்பனை என்ற செயலியையும், அதற்கான சாப்ட்வேரையும் என்ஜினீயர்கள் இணைத்தனர். இந்த கடைகளில் இந்த பணியை கலெக்டர் ஷில்பா மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர், தாலுகா வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பல ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்வதற்கு இணையதள வசதி கிடைக்காததால் நேற்று இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தச்சநல்லூரில் உள்ள அமுதம் ரேஷன்கடை, சிந்துபூந்துறையில் உள்ள கூட்டுறவு ரேஷன்கடை உள்ளிட்ட பல கடைகளில் பொருட்கள் வழங்க முடியவில்லை. மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 213 கடைகளில் நேற்று பொருட்கள் விற்பனை நடைபெறவில்லை. கடைகளில் உள்ள பணியாளர்கள் மிஷினில் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் ஆகாததால் விற்பனை இல்லை என்று எழுதிப்போட்டுவிட்டு கடையை அடைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நெல்லை மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்புகின்ற ரேஷன்கடையில் பொருட்கள் வாங்கி சென்றனர். சில கடைகளில் பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்வதற்கு இணையதள வசதி கிடைக்காததால் பொருட்கள் வழங்க முடியவில்லை. அனைத்து கடைகளுக்கும் என்ஜினீயர்கள் சென்று காலை முதல் பி.ஓ.எஸ். எந்திரத்தில் பொருட்கள் வழங்குவதற்காக பெயர்வு விற்பனை என்ற செயலியையும், அதற்கான சாப்ட்வேரையும் இணைத்து வருகிறார்கள். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கோரம்பள்ளம் அமுதம் ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார். அப்போது நெல்லை மாவட்டம் மற்றும் வெளி தாலுகாவை சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்திவாசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது;-
தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 957 ரேஷன் கடைகளில் சுமார் 4 லட்சத்து 93 ஆயிரத்து 842 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் பதிவு செய்யப்பட்ட ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொண்டு வந்தார்கள். தற்போது, இந்த திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரேஷன் கார்டை எந்த ரேஷன் கடைகளிலும் காண்பித்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணப்படும். குறிப்பாக, ரேஷன் கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு கண்காணிக்கப்படுகிறது. மேலும், கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ள என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தினமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கண்காணித்து செயல்படுத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் அமுதம் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டார். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டதற்காக ரவிசந்திரனுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் மண்எண்ணெய் மட்டும் தாங்கள் பதிவு செய்து உள்ள ரேஷன் கடைகளில் பெற வேண்டும். அரிசி, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) வதனாள், வருவாய் ஆய்வாளர் சுகுணா மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story