குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Feb 2020 4:00 AM IST (Updated: 2 Feb 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பரிதவித்தனர்.

நாகர்கோவில், 

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. ஒன்றிரண்டு வங்கிகள் திறந்திருந்தாலும் அவற்றில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது.

போராட்டத்தையொட்டி நாகர்கோவில் வடசேரி டிஸ்ட்டில்லரி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கிகளின் சம்மேளன மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, குமரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் ரகுநாதன், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் வனிதா, ஊழியர் சங்க உதவி பொதுச்செயலாளர் விஷ்ணு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொதுச்செயலாளர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த போராட்டத்தால் வங்கிகளில் 2-வது நாளாக பணம் போட முடியாமலும், பணம் எடுக்க முடியாமலும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை வங்கிகள் மூலம் செலுத்தப்படுவதால் பணம் எடுக்க ஏராளமானோர் மாதத்தின் முதல் நாளான நேற்று பல ஏ.டி.எம். மையங்களுக்கு வந்தனர். ஆனால் ஏராளமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாமல் முடங்கி கிடந்தது. இதனால் பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மக்களும் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

இந்த போராட்டம் தொடர்பாக வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் போராட்டம் காரணமாக 2 நாட்களில் ரூ.300 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 920 ஏ.டி.எம்.களில் 800 ஏ.டி.எம்.கள் பணமின்றி முடங்கின. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள் என்று தெரிவித்தார்.

Next Story