மகனுடன் விசாரணைக்கு வந்தவர் போலீஸ் நிலைய கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை


மகனுடன் விசாரணைக்கு வந்தவர் போலீஸ் நிலைய கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2020 4:45 AM IST (Updated: 2 Feb 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

போலி தங்க நாணய மோசடி தொடர்பாக மகனுடன் விசாரணைக்கு வந்தவர் போலீஸ் நிலைய கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

குடியாத்தம், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50). தொழிலதிபரான இவர் லாட்ஜ் நடத்தி வந்தார். இவரது லாட்ஜில் சேலத்தை சேர்ந்த மரவியாபாரி ஒருவர் அடிக்கடி வந்து தங்குவார். அவருடன் மாதையனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தொடர்பு ஏற்படுத்திய நபர் குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியதையடுத்து மாதையன் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு ரூ.25 லட்சத்துடன் குடியாத்தம் அருகே உள்ளி கூட்ரோடு பகுதிக்கு வந்தார். அங்கிருந்தவர்கள் தங்க நாணயம் என கூறிய பளபளக்கும் நாணயங்களை மாதையன் வாங்கினார். மொத்தம் 2½ கிலோ நாணயங்கள் இருந்தன. அதனை கொடுத்தவர்கள் பணத்தை வாங்கியதும் அவசர அவசரமாக புறப்பட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மாதையன் உடனடியாக அந்த நாணயங்களை சோதனை செய்ய ஆம்பூர் கொண்டு சென்றபோது அது போலியான தங்க நாணயங்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாதையன் குடியாத்தம் தாலுகா காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாதையனிடம் செல்போனில் பேசியவர்கள் விபரங்கள் சேகரிப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் கே.வி.குப்பம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் அஜித்குமாரை (23) சந்தேகத்தின்பேரில் தேடி சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அஜித்குமார் இல்லாததால் அவரது அண்ணன் பாண்டியனை குடியாத்தம் தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவும், அஜித்குமாரை அழைத்து வந்தபின்பு பாண்டியனை அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்றுமுன்தினம் மாலையில் மகேந்திரன், தனது இளைய மகன் அஜித்குமாரை அழைத்துக் கொண்டு குடியாத்தம் தாலுகா காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலீசார் மகேந்திரனையும், அவரது மூத்த மகன் பாண்டியனையும் திரும்ப அனுப்பவில்லை. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜே‌‌ஷ்குமார் என்பவரையும் போலீஸ் நிலைத்திற்கு அழைத்து வந்திருந்தனர். நேற்று மதியம் வரை 4 பேரையும் காவல்நிலையத்திலேயே வைத்திருந்தனர். அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் கழிவறைக்கு செல்வதாக மகேந்திரன் கூறியுள்ளார். போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறை கதவை திறந்து பார்த்தபோது அங்கு உயரத்தில் இருந்த ஜன்னல் கம்பியில் தன்னிடம் இருந்த டவலால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் மகேந்திரனின் மகன்கள் உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மகேந்திரனின் உறவினர்கள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.மேகநாதன் உள்பட ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், துரைபாண்டியன், சுரே‌‌ஷ், பழனிச்செல்வம், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், குமார் உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மகேந்திரன் குடும்பத்தினர் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் மகேந்திரன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாதையன் அளித்த புகார் மீது விசாரணை நடத்தி வந்தோம். அப்போது செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் அதில் அஜித்குமார் எண் இருந்துள்ளது. எனவே அவரை ஆரம்ப கட்ட விசாரணைக்காக அழைத்து வந்தோம். அவருடன் வந்த அவரது தந்தை மகேந்திரன் தூக்கிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

Next Story