டாக்டர்கள், செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி


டாக்டர்கள், செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 2 Feb 2020 4:00 AM IST (Updated: 2 Feb 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதனை டீன் சுகந்தி ராஜகுமாரி தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில், 

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 4 படுக்கையுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 8 படுக்கையுடன் கூடிய தனி வார்டும், குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் 4 படுக்கையுடன் கூடிய தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நலப்பணிகள் துறை இணை இயக்குனர் ஜான்பிரிட்டோ தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களை 20 நாட்கள் வரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அல்லது தக்கலை, குழித்துறை ஆஸ்பத்திரிகளில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார்.

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவ- மாணவிகள், செவிலிய மாணவிகள், ஆய்வக பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. இந்த பயிற்சியை மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 முறை ஒவ்வொருவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பாதிக்க வாய்ப்புள்ள குழந்தைகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

நுண்ணுயிரியல் துறையை சேர்ந்த டாக்டர்கள் ஜோதி, சுதா ஆகியோர் பேசும்போது, கைகளை எவ்வாறு கழுவ வேண்டும்? முக கவசம் எவ்வாறு அணிய வேண்டும் என்பதை செயல்முறை விளக்கமாக அளித்தனர். சமூக மருந்தியல் துறை தலைவர் சுரேஷ்பாலன், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் ஆகியோர் தடுப்பு முறைகள் குறித்து பேசினர். பொது மருத்துவத்துறை தலைவர் பிரின்ஸ் பயஸ், கொரோனோ வைரஸ் உருவான விதம், அதன் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கம் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

வைரஸ் நோய் எப்படி உருவாகிறது? பரவுகிறது? இதற்கான தடுப்பு முறைகள் என்ன? வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? வந்தால் என்னென்ன முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்தவர்களுக்கு கட்டாயமாக பரிசோதனை செய்ய வேண்டும், சீனாவில் இருந்து வந்தவர்கள் இருமல், சளி இருந்தால் உடனே அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 2 நாட்கள் ஆகும். தற்போது புனேவில் தான் இதற்கான பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். சில நாட்களில் சென்னையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தொண்டையில் இருந்து சளியும், ரத்த மாதிரியும் எடுத்து அனுப்ப வேண்டும். இவற்றை 4 டிகிரி டெம்பரேச்சரில் அனுப்ப வேண்டும். அப்போது தான் அதில் உள்ள அணுக்கள் உயிரோடு இருக்கும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ரெனிமோள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை உணர்வது எப்படி?

கொரோனா வைரஸ் அறிகுறிகளை பொறுத்தவரையில் சாதாரண காய்ச்சல், இருமல் போன்று ஏற்படும். பின்னர் திடீரென நிமோனியா மாதிரியோ, மூச்சு முட்டல் போன்றோ ஏற்படும். உடல் உறுப்புகள் செயல் திடீரென செயல் இழந்து போய்விடும். ஆனால் இதய நோயாளிகள், சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோருக்கு இந்த வைரஸ் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும். இம்மாதிரியானவர்களுக்கு மோசமான விளைவுகளை இந்த வைரஸ் உண்டாக்கும். குமரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பொதுமருத்துவத்துறை தலைவர் பிரின்ஸ் பயஸ் தெரிவித்தார்.

Next Story