அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் புஷ்பாஞ்சலி - 2 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டது
அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் 2 டன் பூக்கள் மூலம் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள்.
இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெற்றன. மதியம் களபாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் யானை மீது 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பின்னர் அந்த பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பினு, ஆலோசனை கமிட்டி தலைவர் பிஜூலால் பேலஸ், ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிகரன் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story