ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆண்டு விழா ; போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பரிசுகளை வழங்கினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி சார்பில் தேசிய கருத்தரங்கம் நிறைவு விழா மற்றும் ஆண்டு விழா ஆகியவை வடசேரியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.
கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி வரவேற்றார். பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார். அப்போது, “ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறந்த மருத்துவம் வழங்கப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை பெற்றால் வாழ்க்கையே மாறிவிடும். ஆயுர்வேதத்தின் மீது இன்னும் அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. எனவே அந்த நம்பிக்கையை மாணவ-மாணவிகள் உறுதி படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்“ என்றார்.
விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசும்போது, “1995-ம் ஆண்டு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் தான் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. பிற மாவட்டங்களில் தனியார் கல்லூரிகள் தான் உள்ளன. ஏழை மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களாக இருந்தாலும் மதிப்பெண் மற்றும் தரம் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த கல்லூரியின் மூலமாக குமரி மாவட்டம் பெருமை அடைந்துள்ளது. மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்று, உயிரை காக்க கூடிய தெய்வங்களாக மக்களுக்கு இருக்க வேண்டும்“ என்றார்.
இதைத் தொடர்ந்து ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றவர்களுக்கு சுழற்கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது.
பரிசுகளை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், ஜெயசுதர்சன் மற்றும் டாக்டர் கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story