தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி தொழிலாளிக்கு வலைவீச்சு


தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலியானாள். விபத்தை ஏற்படுத்திய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டையை சேர்ந்தவர் அறிவரசன். இவர் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 5 வயதில் வர்ஷா ஸ்ரீ என்ற மகள் இருந்தாள். இவள் தொளசம்பட்டி அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பதற்காக மணிமேகலை, வர்ஷா ஸ்ரீ ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி செந்தில்குமார் (வயது 25) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சிறுமி வர்ஷா ஸ்ரீ மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டார். இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவளை தாய் மணிமேகலை மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வலைவீச்சு

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி வர்ஷா ஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து அவளது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து அறிவரசன் கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தொழிலாளி செந்தில் குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story