மத்திய பட்ஜெட்டில் விவசாயி, வியாபாரிகளுக்கு எந்த பயனும் இல்லை - சஞ்சய்தத் குற்றச்சாட்டு


மத்திய பட்ஜெட்டில் விவசாயி, வியாபாரிகளுக்கு எந்த பயனும் இல்லை - சஞ்சய்தத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Feb 2020 10:45 PM GMT (Updated: 1 Feb 2020 9:11 PM GMT)

மத்திய பட்ஜெட்டில் விவசாயி, வியாபாரிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் தொடர்பான காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவி முத்துவிஜயா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு தெரிவித்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை. பா.ஜனதா அரசு தற்போது தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், வியாபாரிகள் என யாருக்கும் எந்தவித பயனும் இல்லை.

சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் குறைவாக உள்ள நிலையிலும், நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. மத்திய அரசு அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்ட நபரை சமூக வலைத்தலங்களில் அடையாளம் காட்டிய பின்னரும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று உள்ளது. இதில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் ஆதரவு இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story