தஞ்சை கோவில் குடமுழுக்கு, பழனி தைப்பூச விழா: காரைக்குடி மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்


தஞ்சை கோவில் குடமுழுக்கு, பழனி தைப்பூச விழா: காரைக்குடி மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 2 Feb 2020 3:45 AM IST (Updated: 2 Feb 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கோவில் குடமுழுக்கு, பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு காரைக்குடி மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காரைக்குடி, 

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வருகிற 5-ந்தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூருக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர உள்ள காரணத்தினால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பாக சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து நாளை (திங்கட் கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

ஆங்காங்கே உள்ள முக்கிய பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பொருட்டு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பஸ்கள் இயக்கம் சிறப்பாக அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் அலுவலகம் சார்பில் காரைக்குடி மண்டல அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் காரைக்குடி மண்டல பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பழனியில் வருகிற 8-ந் தேதி தைப்பூசத் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய இடங்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு சேவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காரைக்குடி மண்டலத்தின் சார்பில் பயணிகள் மற்றும் பக்தர்கள் வசதியை முன்னிட்டு இரவு பகலாக தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story