கலை- விளையாட்டு விழா ஆண்டு தோறும் நடத்தப்படும் நாராயணசாமி தகவல்


கலை- விளையாட்டு விழா ஆண்டு தோறும் நடத்தப்படும் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:48 PM GMT (Updated: 1 Feb 2020 10:48 PM GMT)

புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழா இனி ஆண்டு தோறும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

புதுச்சேரியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு, கலை மற்றும் விளையாட்டு விழாவுக்கு உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது.

விழாவிற்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஒலிம்பிக் சுடர் ஏற்றியும், பலூன்களை பறக்கவிட்டும் தொடங்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி மைதானத்தை வலம் வந்து, ஒலிம்பிக் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்தனர்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விழாவில், முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

காரைக்கால் பகுதியில் விளையாட்டு மற்றும் கலை கலாசார விழா சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த விழா தொடங்கப்படவுள்ளது. மாகி, ஏனம் ஆகிய பிராந்தியங்களில் விரைவில் விழா நடத்தப்படும். அதுமட்டுமின்றி, இனி ஆண்டுதோறும் புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழா நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் பாஸ்கரன், உயர்கல்வித்துறை ஒய்.எல்.எம்.ரெட்டி, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், முதன்மை கல்வி அதிகாரி அல்லி மற்றும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 12 கிலோ மீட்டர், 6.8 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது. நாளை (திங்கட்கிழமை) பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

Next Story