கோபியில் பரபரப்பு அமைச்சர் வீட்டை முற்றுகையிட சென்ற 205 பேர் கைது


கோபியில் பரபரப்பு அமைச்சர் வீட்டை முற்றுகையிட சென்ற 205 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2020 5:18 AM IST (Updated: 2 Feb 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

கோபியில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட சென்ற 205 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர், 

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட போவதாக ஆதி தமிழர் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதற்கு கோபி போலீசார் அனுமதி தரவில்லை. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீடு அமைந்துள்ள தோட்டத்தின் முன்புறமும், கோபி-ஈரோடு மெயின்ரோட்டில் உள்ள பிரிவிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

205 பேர் கைது

இந்த நிலையில், கோபி பஸ்நிலையத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட புறப்பட்டார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.மொத்தம் 205 பேர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story