சிக்னலில் நிற்கும் போது வாகன ஓட்டிகள் ‘ஹாரன்’ அடிப்பதை தடுக்க புதிய முயற்சி


சிக்னலில் நிற்கும் போது வாகன ஓட்டிகள் ‘ஹாரன்’ அடிப்பதை தடுக்க புதிய முயற்சி
x
தினத்தந்தி 1 Feb 2020 11:55 PM GMT (Updated: 1 Feb 2020 11:55 PM GMT)

சிக்னலில் நிற்கும் போது வாகன ஓட்டிகள் தேவையின்றி ஹாரன் அடிப்பதை தடுக்க மும்பை போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.

மும்பை,

மும்பையில் ஒலி மாசு அதிகமாக உள்ளது. குறிப்பாக சிக்னல்களில் நிற்கும் போது வாகன ஓட்டிகள் தேவையின்றி அடிக்கும் ஹாரன் சத்தத்தால் இந்த ஒலி மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க மும்பை போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.

அதன்படி மும்பை போலீசார், மும்பையில் உள்ள சி.எஸ்.எம்.டி., மெரின் டிரைவ், பெடடர் ரோடு, தாதர் இந்து மாதா, பாந்திரா ஆகிய இடங்களில் உள்ள டிராபிக் சிக்னல்களில் டெசிபல் மீட்டரை இணைத்து உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் பட்சத்தில், அவர்கள் காத்து நிற்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் நேரமானது மேலும் அதிகரித்து கொண்டே இருக்கும்.

உதராணமாக ஒரு வாகன ஓட்டி சிக்னலில் காத்து இருக்கிறார். அப்போது சிவப்பு விளக்கு எரியும் நேரம் 90 வினாடியில் தொடங்கி 30, 20, 10 என குறைந்து கொண்டே வரும். அந்த நேரத்தில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் ஹாரன் அடித்து இதனால் ஒலி மாசு 85 டெசிபலை தாண்டினால், சிவப்பு சிக்னல் மீண்டும் 90-ல் இருந்து தொடங்கும்.

இந்த முயற்சியை கடந்த நவம்பர் மாதத்தில் மும்பை போலீசார் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் இந்த முயற்சி மேலும் பல சிக்னல்களில் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே கூறியுள்ளார். மேலும் இதுதொடா்பான வீடியோவையும் மும்பை போலீசார் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன் இடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது. அந்த வீடியோவை இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் லைக் செய்து உள்ளனர். 20 ஆயிரம் பேர் ரீடுவிட் செய்து உள்ளனர்.

Next Story