ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா வைரஸ்’ சிறப்பு பிரிவு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஈரோடு,
சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் முதலில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் கண்டறியப்பட்டனர். சீனாவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டாலும் நாடு முழுவதும் சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என்று தனியாக சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பாதிப்பு இல்ைல
இதுபற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரேம் ஞானக்கண் நவாஸ் கூறியதாவது:-
ஈரோட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் மருத்துவத்துறை தயார் நிலையில் உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அதுபோன்ற பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களை தனிப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கும் வகையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கான சிறப்பு வசதி உள்ளது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story