ஜமுனாமரத்தூரில் விடுதியுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்


ஜமுனாமரத்தூரில் விடுதியுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஜமுனாமரத்தூரில் மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதியுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சார்பாக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஜமுனாமரத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 32 பள்ளிகளை சேர்ந்த 1,575 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்பட தடகள போட்டிகள் மற்றும் கைப்பந்து, கபடி, கால்பந்து, கேரம், செஸ் போன்ற போட்டிகளும் நடந்தது.

சான்றிதழ்

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். சமூக நலத்துறையின் பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், கைக்குட்டைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது. முடிவில் அரசவள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியை சேர்ந்த மாணவர்களின் தப்பாட்டம், பறையாட்டம் மற்றும் கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:-

ஜவ்வாதுமலை பகுதியின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி, கொடைக்கானல் போன்று ஜவ்வாதுமலை பகுதியினை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு விளையாட்டு அரங்கம்

குழந்தைகள் முன்னேற்றத்தின் முதல் படி கல்வி. படிப்பது க‌‌ஷ்டமாக இருந்தாலும் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும். உங்கள் திறமைகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து அணி தமிழகத்தில் சிறந்த அணியாக திகழ்கிறது.

ஜவ்வாதுமலை விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சிரமப்பட்டு வந்தனர். உடனடியாக அரசின் பார்வைக்கு எடுத்து சென்று ரூ.31 லட்சம் உதவித்தொகை மலைவாழ் பள்ளி விடுதி மாணவர்களுக்கு பெற்றுத்தரப்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூரில் மாணவர்கள் தங்கி படிக்கும் விளையாட்டு விடுதியுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக பெற்றோர்கள் இல்லாமல் பள்ளியில் படித்து வரும் வீரப்பனூர் கிராமத்தை சேர்ந்த மாணவி எம்.ஆனந்திக்கு ரூ.2 ஆயிரம் ஆதரவுத் தொகை, குழந்தை திருமணத்தில் இருந்து மீண்டு 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு கைக்கெடிகாரம், வனச்சரக நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 150 மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம், செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளியை சேர்ந்த 109 மாணவர்களுக்கு அகராதி புத்தகம், திருக்குறள் புத்தகம், ஜவ்வாதுமலை பகுதி பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 800 மாணவர்களுக்கு ஜர்க்கின், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 கிராம ஊராட்சி நூலகத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ‌ஷீலா ஜெயந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் பி.கந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.கோகிலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ஜீவா, கோவிலூர் ஊராட்சி மன்றத் தலைவர் நடேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story