வேடசந்தூர் அருகே பரிதாபம்: பலாத்காரம் செய்து 6 வயது சிறுமி கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர், தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இதில் சிறுவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5-ம் வகுப்பும், சிறுமி 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று சிறுமியின் தாய் நூற்பாலை வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தந்தை மட்டும் இருந்தார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் இரு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். இந்தநிலையில் மதியம் 2 மணிக்கு சிறுமி, விளையாட செல்வதாக தனது அண்ணனிடம் கூறிவிட்டு சென்றாள். மாலை 4 மணி அளவில், வேலை முடிந்து தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது, உனது மகள் தலையில் அடிபட்டு ஊருக்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் மயங்கி கிடப்பதாக பொதுமக்கள் சிலர் கூறினர். எனவே கணவன்-மனைவி இருவரும் பதறி அடித்துக்கொண்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுமி தலையில் பலத்த காயத்துடன் அங்குள்ள டிராக்டர் முன்பு மயங்கி கிடந்தாள்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்து, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியை, மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சிறுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது அங்கு நிறுத்தியிருந்த டிராக்டர் அருகே ரத்தம் சிதறி கிடந்தது. மேலும் அருகே உள்ள சோளக்காட்டில் கதிர்கள் சாய்ந்து இருந்தன. எனவே சிறுமியை மர்ம நபர்கள் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு சோளக்காடு வழியாக தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து சிறுமியுடன் விளையாடி கொண்டிருந்தவர்கள் யார், யார்? என்பது குறித்தும், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் நடமாடியவர்கள் பற்றியும், மாலை நேரத்திற்கு பிறகு யாரெல்லாம் ஊரில் இல்லை என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான், அவள் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சிறுமியின் உடல், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story