தாறுமாறாக ஓடிய ஸ்கூட்டர் சுவரில் மோதல்; 2 மீனவர்கள் பலி - கன்னியாகுமரியில் பரிதாபம்
கன்னியாகுமரியில் தாறுமாறாக ஓடிய ஸ்கூட்டர் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி வாவத்துறையை சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவருடைய மகன் ஆன்றோ வில்சன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் ஹெஸ்டன் (30). இவருக்கு திருமணம் முடிந்து கவிதா என்ற மனைவியும், 7 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர். மீனவர்களான ஆன்றோ வில்சனும், ஹெஸ்டனும் நெருங்கிய நண்பர்கள்.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் 2 பேரும் ஸ்கூட்டரில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் தெற்கு குண்டல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஆன்றோ வில்சன் ஓட்டினார். ஹெஸ்டன் பின்னால் அமர்ந்திருந்தார்.
அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கல்லூரி அருகே சென்றபோது, திடீரென ஸ்கூட்டர் ஆன்றோ வில்சனின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஸ்கூட்டர் தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோர மின்கம்பத்தில் மோதியபடி, அருகில் உள்ள சுவரிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆன்றோ வில்சன், ஹெஸ்டன் ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இருவரும் துடிதுடித்து அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பிணமாக கிடந்த 2 பேருடைய உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்கூட்டர் விபத்தில் 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story