கோடீஸ்வரனாக மாற வேண்டும் என்ற ஆசையில் 200-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் சுருட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
குரூப்-4 தேர்வில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டி கோடீஸ்வரராக மாற வேண்டும் என்ற ஆசையில் குரூப்-4 தேர்வில் மோசடி செய்து 200-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர்,
குரூப்-4 முறைகேட்டில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் (வயது 46) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த பொங்கல் தினத்தன்று அழைத்து சென்று தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்கும் தொழிலாளியாக உள்ள திருவராஜ் இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்ததால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் அதே கிராமத்தைச் சேர்ந்த தற்போது சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சித்தாண்டி(வயது46) இந்த மோசடி சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
சித்தாண்டியின் மனைவி சண்முகப்பிரியா சென்னையில் அரசு பணியில் உள்ளார். சித்தாண்டி தம்பி வேல்முருகன் காரைக்குடியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் சார்- பதிவாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காரைக்குடிக்கு வந்து பணியில் இருந்த வேல்முருகனை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு தனது அண்ணன் சித்தாண்டி தான் அரசு வேலை வாங்கிக் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த முறைகேடுகளில் பல்வேறு திடுக்கிடும் சம்பவமும் நடந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:- இந்த முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியாக சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டி ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னையில் உயர் அதிகாரி ஒருவருக்கு கார் ஓட்டும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை பயன்படுத்தி முதன் முதலில் தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் தனது தம்பி வேல்முருகன் மற்றும் அவரது மனைவிக்கும் அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் தனது பழக்கத்தை வைத்து பணம் சம்பாதித்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டுள்ளார். இதனால் டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகளுடனான நெருக்கத்தை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது சொந்த கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அரசு வேலை பெற்றுக்கொடுக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இவ்வாறு அவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டடுள்ளது தெரிய வருகிறது.
மேலும் இவர் இந்த மோசடியில் ஈடுபடுவதற்காக தனது மற்றொரு தம்பி கார்த்தி மற்றும் மானமதுரையை சேர்ந்த செல்வக்குமார் என்பவரை ஒப்பந்ததாரராக பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் சித்தாண்டி மூலம் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் சித்தாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது. மேலும் இந்த முறைகேடுகளுக்கு பல்வேறு டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகளும் மறைமுகமாக பணத்தில் ஒரு பங்கை பெற்றுக்கொண்டு உதவியது தெரிய வருகிறது.
இந்த முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் தனது குடும்பத்துடன் பதுங்கி உள்ளார். அவரை பிடிப்பதற்காக சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் இறங்கி வருகின்றனர். இந்த வழக்கில முக்கிய குற்றவாளியாக உள்ள சித்தாண்டியை பிடித்து விசாரணை நடத்தும் போது இதில் பல்வேறு உயர் அதிகாரிகள், கார் ஓட்டுநர்கள், புரோக் கர்கள், ஒப்பந்ததாரர்கள், முறைகேடு முறையில் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்று பணியில் உள்ளவர்கள் என பெரும் பட்டாளமே இதில் சிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story