சென்னை வி.ஐ.டி. சார்பில் தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டிகள் நாடு முழுவதும் இருந்து 70 கல்லூரிகள் பங்கேற்பு


சென்னை வி.ஐ.டி. சார்பில்   தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டிகள்   நாடு முழுவதும் இருந்து 70 கல்லூரிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Feb 2020 10:45 PM GMT (Updated: 3 Feb 2020 7:57 PM GMT)

சென்னை வி.ஐ.டி. சார்பில் தேசிய அளவிலான கலை-விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 70 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

சென்னை,

சென்னை வி.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை வி.ஐ.டி.யில் ‘வைப்ரன்ஸ் 2020’ என்ற பெயரில் தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் வருகிற 6-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்பட 23 வகையான விளையாட்டு போட்டிகளும், ஆடல்-பாடல், ஆடை அலங்கார அணிவகுப்பு உள்பட 150 வகையிலான கலை நிகழ்ச்சி போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நாடு முழுவதில் இருந்தும் 70 கல்லூரிகளும், சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன. 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்கின்றனர். போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சம் ஆகும்.

கிரிக்கெட் வீரர்

தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் பியூஷ் சாவ்லா பங்கேற்கிறார். பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இன்னிசை கச்சேரி, பிரபல பாடகர் மோகித் சவான் குழுவினரின் பாடல் நிகழ்ச்சி, ஸ்ரே கண்ணா குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந்தேதி நிறைவு விழாவில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

சென்னை வி.ஐ.டி.யில் வருகிற கல்வி ஆண்டு (ஜூன்) எம்.எஸ்.சி. உள்பட புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சென்னை வி.ஐ.டி.யின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், துணைவேந்தர் ஆனந்த் சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story