சிற்றம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த சுகாதார நிலையம் புதிதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


சிற்றம்பாக்கம் ஊராட்சியில்   பழுதடைந்த சுகாதார நிலையம்   புதிதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2020 4:00 AM IST (Updated: 4 Feb 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

சிற்றம்பாக்கம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. அதை இடித்து அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சிற்றம்பாக்கம் ஊராட்சி. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. பயன்பாட்டில் இருந்த இந்த கட்டிடம், நாளடைவில் மருத்துவ அதிகாரிகள் முறையாக பராமரிக்காததை தொடர்ந்து மூடப்பட்டது.

இவ்வாறாக அந்த துணை சுகாதார நிலையம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டி இருப்பதால் அந்த துணை சுகாதார நிலையத்தின் முன்பக்க கதவு, பின்பக்க கதவு, பக்கவாட்டு கதவு மற்றும் உட்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல்கள், கதவுகள் திருட்டு போனது. மேலும் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு ஓடுகள் மற்றும் இரும்பு தளவாட பொருட்கள் திருட்டு போனது.

கோரிக்கை

தற்போது இந்த துணை சுகாதார நிலையம் வெற்று சுவராக பயன்பாடு இல்லாமல் காட்சியளிக்கிறது. மேலும் துணை சுகாதார நிலையம் பழுதடைந்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சிலர் இந்த துணை சுகாதார நிலையம் முன்பு கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். இந்த பகுதி மக்கள் தங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றால் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரம்பாக்கத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

எனவே சிற்றம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் வெற்று சுவராக இருக்கும் அதை இடித்து அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story