சுடுகாட்டை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அளவீடு செய்து கற்கள் அமைக்க கோரிக்கை


சுடுகாட்டை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்   அளவீடு செய்து கற்கள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2020 4:15 AM IST (Updated: 4 Feb 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே சுடுகாட்டை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது. இந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி நிர்வாகம் அந்த குட்டை மற்றும் சுடுகாட்டின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க கற்கள் நடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையறிந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி அங்கு நடப்பட்டிருந்த கற்களை உடைத்து எறிந்தனர். சுற்றுசுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை அங்கிருந்து கலைத்து போக செய்தனர்.

ஆக்கிரமிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

பல ஆண்டுகளாக இந்த இடம் விவசாய நிலமாக இருந்தது. தற்போது விவசாயம் இல்லாததால் இந்த இடம் காய்ந்து காலி நிலமாக உள்ளது. இங்கிருந்த குட்டை மற்றும் சுடுகாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைக்க கற்கள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் முறையாக அளவீடு செய்து கற்களை நட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் குட்டை மற்றும் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்யாமல் 15 அடி இடைவெளி விட்டு சுற்றுச்சுவர் அமைப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து கற்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக நிலத்தை அளவீடு செய்து கற்கள் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story