திருப்பணிகரிசல்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


திருப்பணிகரிசல்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பணிகரிசல்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஏராளமானவர்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர்.

இந்திய தேசிய லீக் கட்சியினர் நெல்லை மாவட்ட தலைவர் காதர்பாஷா, செயலாளர் சேக் ஹயாத் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நடப்பு கல்வியாண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக இந்த உத்தரவு உள்ளது. எனவே 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

நெல்லை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஊர் பொதுமக்கள் விவசாய சங்க தலைவர் முத்துமாரி தலைமையில் வந்து கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் 700 ஏக்கரிலும், பக்கத்து கிராமங்களில் 700 ஏக்கருக்கு மேலும் நெல் பயிரிட்டு உள்ளோம். நெல் விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அந்த நெல்லை விற்பனை செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

களக்காடு பகுதி மக்கள் புரட்சிபாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நாங்குநேரி தாலுகா களக்காடு ஜெ.ஜெ.நகர் விலக்கில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. பத்மநேரி கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியான களக்காடு பழைய பஸ்நிலையம் அருகில் தற்போது ஒரு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் வங்கி, வணிக வளாகம், குடியிருப்புகள் உள்ளன. எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 23-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது இல்லை. மேலும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இந்த போட்டி நடந்தால் இதில் பார்வையாளராக கலந்து கொள்ளும் மக்களிடையே சாதி ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஸ்ரீவைகுண்டத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

டாஸ்மாக் கடை

தச்சநல்லூர் மேலக்கரை பகுதி மக்கள், அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

மானூர் பகுதி விவசாயிகள், பயிர் சாகுபடி செய்ய மும்முனை மின்சாரம் சீராக வழங்க வேண்டும் என்று மானூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் ஆபிரகாம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

நெல்லை டவுன் நதிபுரத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியினர் மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “பாளையங்கோட்டை அரசு மாணவிகள் விடுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கவில்லை, கேட்டால் அங்குள்ளவர்கள் மாணவிகளை மிரட்டுகிறார்கள். இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அங்குள்ள மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி

பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகரை சேர்ந்த கண்ணன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி நெல்லையை சேர்ந்த 2 பேர் ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டனர். பணத்தை கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனது மகனுக்கு வேலை கிடைத்ததாக கூறி தந்த போலியான அரசு வேலை உத்தரவு நகலை இத்துடன் இணைத்து உள்ளோம் என்று கூறி உள்ளார்.


Next Story