மனைவி தூக்கில் தொங்கியதால் 2 பெண் குழந்தைகளுடன் ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


மனைவி தூக்கில் தொங்கியதால் 2 பெண் குழந்தைகளுடன் ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், துக்கம்தாங்காமல் 2 பெண்குழந்தைகளுடன் வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4½ வருடங்களாகிறது. சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் நர்சிங் படித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நிர்மலாவுக்கும், அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த நிர்மலா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட செய்திகேட்டு பெங்களூருவில் இருந்து வெங்கடேசன், கொடைக்கல் கிராமத்திற்கு வந்தார். அப்போது அவர் கண்ணீர் வீட்டு கதறி அழுதார். பின்னர் மனைவி இறந்து விட்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என வெங்கடேசன் அஞ்சியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மிகுந்தசோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை தனது 2 பெண் குழந்தைகளுடன் ராணிப்பேட்டை அருகே அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது, இரவு 7 மணி அளவில் சென்னையிலிருந்து, கோவை நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு வெங்கடேசன் தனது 2 மகள்களான சஞ்சனா, ரித்திகா ஆகியோருடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதில் 3 பேரின் உடலும் ரெயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறி கிடந்தது. இதுபற்றி தகவலறிந்த வாலாஜா ரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தனது 2 பெண்குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story