போக்சோ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது : மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம்
போக்சோ சட்டத்தில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துடியலூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 7, 8-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை 7-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவி ஒருவருக்கு, பாடம் கற்றுத் தருவதாக கூறி ஆசிரியர் நடராஜன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.
இது பற்றி அந்த மாணவி, தனது வகுப்பு தோழியிடம் கூறி அழுது உள்ளார். அப்போது ஆசிரியர் நடராஜனால் அந்த மாணவியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி, பெண் ஆசிரியை ஒருவரிடம் முறையிட்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் இருந்த புகார் பெட்டியில் ஆசிரியர் நடராஜன் குறித்து புகார் மனு எழுதி போட்டார். ஆசிரியர் மீது மாணவி தெரிவித்த பாலியல் புகார் விசாரணைக்கு வந்தபோது மாணவியை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்ததாக தெரிகிறது.
மேலும் ஆசிரியர் நட ராஜன், புகார் தெரிவித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த மாணவி ஆசிரியரின் அத்துமீறல் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே மாணவியின் தந்தை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஆசிரியர் நடராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். இதில், ஆசிரியர் நடராஜன் மாணவிக்குபாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறார் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் (போக்சோ சட்டம்) ஆசிரியர் நடராஜன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
ஆசிரியர் நடராஜன் 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். அவர் அப்பள்ளியில் படிக்கும் மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. தற்போது 7-ம் வகுப்பு மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பு மற்றும் பள்ளி கல்வித்துறைக்கும் தகவல் தெரிவித்து உள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியர் குறித்து, புகார் பெட்டியில் போட்ட கடிதத்தை மிரட்டி வாபஸ் வாங்க சொன்னது யார்? மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர், மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story