ஊட்டியில் உறைபனி: கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டியில் உறைபனி காரணமாக கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த குளிர்காலத்தை அனுபவிக்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள். ஊட்டியில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடித்ததால் உறைபனி பொழிவு காணப்பட வில்லை. கடந்த மாதம் உறைபனி பொழிவு தொடங்கியது. 10 நாட்களுக்கு பின்னர் லேசான சாரல் மழை பெய்ததால் உறைபனி பொழிவு இல்லாமல் இருந்தது.
இதையடுத்து மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், எச்.பி.எப்., தலைகுந்தா, பைக்காரா, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் புல்வெளிகள் மீது வெள்ளை போர்வையை போர்த்தியது போல் உறைபனி படர்ந்து இருந்தது. புற்களில் பனித்துளிகள் உறைந்து காணப்பட்டது. ஊட்டி குதிரை பந்தய மைதான புல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் உறைபனியாக காட்சி அளித்தது.
ஊட்டி நகரில் கடுங்குளிர் நிலவுவதால், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை அறுவடை செய்ய சரக்கு வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் வெம்மை ஆடைகளை அணிந்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் மார்க்கெட் பகுதியில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். குளிர் காயும் நேரத்தில் உடல் வெப்பம் அடைந்தாலும், அதைவிட்டு சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் குளிர் எடுக்கிறது. ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
உறைபனி காரணமாக தினமும் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக மற்றும் கூலி வேலைக்கு செல்கிறவர்கள், வாகன ஓட்டுனர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அவதி அடைந்து உள்ளனர். வீடுகளில் தண்ணீரை கொதிக்க நீண்ட நேரம் ஆகிறது. அதன் காரணமாக வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் உறைபனி காரணமாக வனப்பகுதிகள், புல்வெளிகள் வேகமாக கருகி வருகின்றன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story