வேடசந்தூர் அருகே சிறுமி சாவு: பலாத்காரம் செய்த பள்ளி மாணவன் கைது
வேடசந்தூர் அருகே சிறுமி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவளை பலாத்காரம் செய்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், குடும்பத்துடன் தங்கியிருந்து தனியார் மில்லில் தம்பதி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதியின் 6 வயது மகள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் இறந்து கிடந்தாள். இவள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது மாணவனின் பெற்றோர் அவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் ஆபாச படங்களை சிறுவன் பார்த்து வந்தான். இதனால் அவனுக்கு செக்ஸ் ஆசை ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சோளக்காட்டுக்கு மாணவன் அழைத்து சென்றான்.
பின்னர் அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அழுத சிறுமியை மாணவன் சமரசம் செய்தான். அதன்பிறகு அங்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கிற தனது தம்பியிடம் சிறுமியை ஒப்படைத்தான். அந்த சிறுவன், அதே பகுதியை சேர்ந்த உமாசேகர் (வயது 50) என்பவரின் பாதுகாப்பில் உள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமான டிராக்டரை எடுத்து ஓட்டினான்.
அதில், பலாத்காரம் செய்த சிறுமி உள்பட 3 சிறுமிகளை ஏற்றிக்கொண்டு ஊர் நோக்கி டிராக்டரில் சிறுவன் சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மட்டும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்தாள். இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.
இதனால் டிராக்டரில் ஏறி விளையாடியபோது சிறுமி தவறி விழுந்து இறந்து விட்டதாக முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு தான் அவள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த மாணவன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.
மேலும் சிறுமியை டிராக்டரில் அழைத்து சென்று விபத்தை ஏற்படுத்தியதாக மாணவனின் தம்பி மீதும், சிறுவனிடம் டிராக்டரை ஓட்ட கொடுத்த விவசாயி உமாசேகர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story