குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்ததால் பரபரப்பு


குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 7:45 PM GMT)

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி குடமுழுக்கை காணவும், தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து கடந்த சில நாட்களாக பெரியகோவில் வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பலத்த சோதனை

பெரியகோவில் உள்ளே நுழையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளும் தீவிர சோதனை செய்யப்படுகின்றன. மேலும் பெரியகோவிலை சுற்றிலும் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தஞ்சை பெரியகோவில் எதிரே வாகன நிறுத்துமிடத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பெரிய கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீசார் பார்த்து வருகிறார்கள்.

ஆளில்லா குட்டி விமானங்கள்

இந்த நிலையில் ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் கண்காணிக்க முடிவு செய்தனர். தமிழகத்தில் போலீசாருக்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி திருச்சி மத்திய மண்டலம் மற்றும் மதுரை தெற்கு மண்டலத்தில் இருந்து ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமராக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள சி.சி.டி.வி. மூலம் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கீழே விழுந்தது

அதன்படி நேற்று இரண்டு ஆளில்லா குட்டி விமானங்களில் ஒரு விமானத்தின் கண்காணிப்பு கேமராவை போலீசார் இயக்கி சோதனை செய்து பார்த்தனர். இந்த ஆளில்லா குட்டி விமானம் 540 அடி உயரம் வரை பறக்கும். 5 கி.மீ. தூரம் சுற்றளவு படம் பிடிக்கும்.

இதனை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் இயக்கி சோதனை செய்து பார்த்தனர். இந்த ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா பெரிய கோவிலை சுற்றி பறந்து படம் பிடித்துக்கொண்டு இருந்தது. அப்போது திடீரென நடராஜர் சன்னதி முன்பு போடப்பட்டு இருந்த தகரப்பந்தல் மீது வந்து விழுந்தது.

பரபரப்பு

அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலே இருந்து கீேழ விழுந்ததில் விமானத்தின் ஒரு பகுதி உடைந்தது. இதையடுத்து அதனை கோவில் ஊழியர்கள் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றனர். பின்னர் போலீசார் வந்து தாங்கள் தான் கண்காணிப்பதற்காக இயக்கியதாக தெரிவித்தனர். அதன்பின்னர் அந்த கேமரா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சை பெரியகோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென குட்டி விமானம் பறந்ததால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாதுகாப்புக்காக சோதனை செய்து பார்த்தது தெரிய வந்ததும் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

டி.ஐ.ஜி.

முன்னதாக டி.ஐ.ஜி.லோகநாதன் கூறுகையில், ‘‘குடமுழுக்கின்போது பக்தர்கள் கூட்ட நெரிசல் உள்ளதா? பாதுகாப்பு எங்கேனும் குறைபாடு உள்ளதா? என ஆளில்லா குட்டி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு எங்காவது தேவைப்பட்டால் உடனே அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக அனுப்பப்படுவர். மேலும் பக்தர்கள் எங்காவது நிறுத்தப்படலாம் என தெரிய வந்தால் அங்கு பக்தர்களும் அனுமதிக்கப் படுவர்’’என்றார்.


Next Story