ஆழியாறு வனப்பகுதியில் இறந்த தாயை தேடி அலையும் குட்டி யானை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


ஆழியாறு வனப்பகுதியில் இறந்த தாயை தேடி அலையும் குட்டி யானை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2020 4:45 AM IST (Updated: 5 Feb 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு வனப்பகுதியில் இறந்த தாயை தேடி அலையும் குட்டி யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு பெண்காட்டு யானை இறந்தது. அந்த யானைக்கு அப்போது 3 மாத குட்டி ஆண் யானை இருந்தது.

தாய் யானை இறந்ததும், அதன் உடல், வனவிலங்குகளுக்குஉணவாக அங்கேயே போடப்பட்டது. ஆனால் தாய் இறந்தது தெரியாமல் குட்டி யானை அதை தேடித்தேடி அலைந்து வருகிறது. இந்த குட்டி யானையை வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் கதிர்வேல், வேட்டை தடுப்பு காவலர்கள் காளிதாஸ், நாகராஜ்ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

குட்டியானை சோகம்

ஆழியாறு வனப்பகுதியில் நவமலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு பெண் யானை 3 மாதகுட்டியுடன் சுற்றித்திரிந்து வந்தது. இந்த நிலையில் அந்த பெண் யானை உடல்நலக்குறைவுகாரணமாக நவமலை பகுதியில் இறந்து கிடந்தது. அப்போது தாயை நெருங்க விடாமல் குட்டி யானை சுற்றி வந்தது. இறந்த யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே போடப்பட்டது. தற்போது அந்த இடத்தில் யானையின் எலும்பு கூடுகள் மட்டும் கிடக்கின்றன.

இந்த நிலையில் தாயை இழந்த குட்டி யானை, தினமும் அந்த இடத்திற்கு தவறாமல் சென்று வருகிறது. தனது துதிக்கையால் எலும்பு கூடுகளை எடுத்து பார்க்கிறது. பிறகு அந்த இடத்தில் இருக்கும் மண்ணை துதிக்கையால் எடுத்து தலையில் போடுகிறது. நீண்டநேரமாக அதே இடத்தில் சோகமாக நிற்கிறது. பின்னர் அது, ஆழியாறு அணைக்கு வந்து குளித்து விட்டு, வால்பாறைரோட்டை ஒட்டி வந்து நின்று கொள்கிறது.

கண்காணிப்பு

மனிதர்களை போன்று தாய் யானைக்கு குட்டி மீதும், குட்டிக்கு தாய் மீதும் பாசம் அதிகம் உண்டு. இந்த நிலையில் தாய் இருக்கும் போது குட்டி யானையின் அருகில் யாரும் செல்ல முடியாது.ஆனால் இந்த குட்டியானை அனாதையாக, தாயை பிரிந்த ஏக்கத்தில் சுற்றித்திரிவது பார்க்க பரிதாபமாக உள்ளது . இதுவரைக்கும் குட்டி எந்த யானை கூட்டத்துடனும் சேராமல் தனியாக உள்ளது. அதே நேரத்தில் குட்டி யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளது.தாய் யானை இறக்கும் போது இந்த குட்டி யானைக்கு 3 மாதம் என்பதால் சாப்பிட பழக்கி கொடுத்து இருக்கும். இதனால் அதற்கு தேவையான உணவை வனப்பகுதியில் தானே தேடி கொள்கிறது. அணையில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து கொள்கிறது. ஆனால் நாளடைவில் ஏதாவது ஒரு கூட்டத்துடன் சேர்ந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. குட்டி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story