தொழில் அதிபரிடம் ரூ.12½ லட்சம் மோசடி: நெல்லையில் போலி ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கும்பல் கைது
நெல்லையில் போலி ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பல் தொழில் அதிபரிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
நெல்லை,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வண்டிகாவிளையை சேர்ந்தவர் வில்பிரின் (வயது 35). பால்பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபரான இவர் ஜவுளி மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.
வில்பிரினுக்கும் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த தயாளு பிரபு (40) என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அப்போது வில்பிரின், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.1 கோடி கடன் வாங்கி தருமாறு தயாளுபிரபுவிடம் கூறியுள்ளார். உடனே அவர் தனது நண்பர்களான திருத்தங்கலை சேர்ந்த முனீஸ்வரன்(32), மணிகண்டன் (42), கருப்பசாமி, சங்கரேசுவரன் ஆகியோரிடம் பேசி, வில்பிரினுக்கு கடன் கொடுக்க முடிவு செய்தார். அப்போது அவர்கள் 5 பேரும் ரூ.1 கோடிக்கு ரூ.12½ லட்சம் கமிஷன் தொகையாக வில்பிரினிடம் கேட்டு உள்ளனர்.
அவரும் அந்த கமிஷன் தொகையை கொடுத்து உள்ளார். உடனே அவர்கள், ரூ.1 கோடி கடன் தொகையை பகுதி பகுதியாக தான் தருவோம் என்று கூறி உள்ளனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் வைத்து கத்தை, கத்தையாக போலி ரூபாய் நோட்டுகளை வில்பிரினிடம் கொடுத்தனர். அதை வாங்கி பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பணம் அனைத்தும் போலியானது ஆகும்.
அதாவது கருப்பு காகிதத்தில் 4 முனைப்பகுதியில் மட்டும் 500 ரூபாய் போன்று போலி நோட்டுகள் அச்சடித்து கொடுத்தது தெரியவந்தது. அந்த நோட்டுகளில் குறிப்பிட்ட ஒரு திராவகத்தை தடவினால் உண்மையான ரூபாய் நோட்டு கிடைத்து விடும் என்று கூறி உள்ளனர். ஆனால், இந்த போலி ரூபாய் நோட்டுகள் வேண்டாம் என்று கூறி வில்பிரின், அவர்களிடம் தகராறு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து வில்பிரின், உடனே பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் நேரடி மேற்பார்வையில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற முனீஸ்வரன், சங்கரேசுவரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், மற்ற 3 பேரும் வெவ்வேறு பஸ்களில் ஏறி தப்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்து சிவகாசி செல்லும் பஸ்சில் தப்பி சென்ற தயாளுபிரபு, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் ராமையன்பட்டி அருகே வைத்து கைது செய்தனர். மேலும் மற்றொரு பஸ்சில் தப்பிச்சென்ற கருப்பசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதான தயாளுபிரபு, மணிகண்டன், முனீஸ்வரன், சங்கரேசுவரன் ஆகிய 4 பேரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர்கள் மேலும் சிலரிடம் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. அதாவது, கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த ஒருவரை கள்ளநோட்டு தருவதாக கூறி ஏமாற்றியதாகவும், இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்த ஒருவரையும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story