கர்நாடகத்தில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் சித்தராமையா வலியுறுத்தல்
கர்நாடகத்தில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
பெங்களூரு,
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், பாதாமி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சித்தராமையா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, தலித் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பஸ் பாஸ் வழங்கப்பட்டது. அனைத்து சமூக மாணவர்களுக்கும் இந்த இலவச பஸ் பாஸ் வழங்க நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் அதை அமல்படுத்த முடியவில்லை.
குமாரசாமி அமல்படுத்தவில்லை
கர்நாடகத்தில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கினேன். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்க காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதை அமல்படுத்த முடியாமல் போய்விட்டது. முதல்-மந்திரி எடியூரப்பா அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நான் அறிவித்த திட்டங்களை குமாரசாமி அமல்படுத்தவில்லை. தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த மடிக்கணினி வழங்கப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தொடர்
2-ம் ஆண்டு மாணவர்கள் என்னை சந்தித்து, தங்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசுவேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story