மத்திய அரசுக்கு சொந்தமான மணலி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ‘திடீர்’ தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்


மத்திய அரசுக்கு சொந்தமான   மணலி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ‘திடீர்’ தீ விபத்து   தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 5 Feb 2020 4:22 AM IST (Updated: 5 Feb 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

திருவெற்றியூர்,

மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான சி.பி.சி.எல்.கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நாப்தா உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் எண்ணெய் செல்லக்கூடிய குழாயின் வால்வில் திடீரென்று கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் தீ மளமளவென பற்றியது. இதையடுத்து தொழிற்சாலையில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர்.

பின்னர் நிறுவனத்தின் உள்ளே தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மூலம் வேகமாக தீப்பற்றிய இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

2 மணி நேரம் போராடி...

ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்ததால் வீரர்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து வீரர்கள் தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர் போன்ற பகுதியில் இருந்து 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும், தீப்பற்றிய இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் பெரும் தீ விபத்து விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

பொதுமக்கள் ‘பீதி’

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே அதிகாலை சி.பி.சி.எல்.நிறுவனத்திலிருந்து அபாய சங்கு திடீரென ஒலித்ததால் அருகில் வசிக்கக்கூடிய மக்கள் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக எண்ணி பெரும் பீதி அடைந்தனர்.

பின்னர் போலீசார் அங்கு சென்று அப்பகுதிமக்களிடம் விபத்து குறித்து ஆபத்து இல்லை என்பதை தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story