பிறப்பு சான்று, லைசென்ஸ் கட்டணம் உயர்வு மும்பை மாநகராட்சி பட்ஜெட் ரூ.33,441 கோடிக்கு தாக்கல் வரி விதிப்பில் மாற்றம் இல்லை


பிறப்பு சான்று, லைசென்ஸ் கட்டணம் உயர்வு   மும்பை மாநகராட்சி பட்ஜெட் ரூ.33,441 கோடிக்கு தாக்கல்   வரி விதிப்பில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 5 Feb 2020 5:44 AM IST (Updated: 5 Feb 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி பட்ஜெட் ரூ.33 ஆயிரத்து 441 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பிறப்பு சான்று மற்றும் பல்வேறு லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால் வரி வதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை,

நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.33 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேஷி நிலைக்குழுவில் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட தொகையை விட இந்த பட்ஜெட் 8.95 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரத்து 692 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

பட்ஜெட்டில் வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை. புதிய வரிகளும் விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிறப்பு சான்றிதழ், கடை லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை

பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, பாலம், சாலை உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*மும்பையில் கனவு திட்டமான கடற்கரை சாலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* கோரேகாவ்- முல்லுண்டு இணைப்பு சாலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* கோரேகாவில் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன. இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

* மும்பையில் பாலங்கள் கட்டும் திட்டங்களுக்கு ரூ.799.65 கோடி ஒதுக்கீடு.

2020-21-ம் நிதியாண்டில் மாநகராட்சி ரூ.28 ஆயிரத்து 448 கோடியே 30 லட்சம் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 13.87 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் ரூ.24 ஆயிரத்து 983 கோடியே 82 லட்சம் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

கல்வி பட்ஜெட்

மும்பை மாநகராட்சியின் கல்வி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கல்வி திட்டங்களுக்கு 2 ஆயிரத்து 944 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக மாநகராட்சி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 25 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story