பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தம்


பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 5 Feb 2020 5:53 AM IST (Updated: 5 Feb 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

மத்திய பட்ஜெட்டில், எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள், தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் 1 மணி நேரம் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை எல்.ஐ.சி. நிறுவனத்தின் 4 கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன. திண்டுக்கல்லில் 2 கிளை அலுவலகங்களும், வத்தலக்குண்டு மற்றும் கொடைக்கானலில் தலா ஒரு கிளை அலுவலகமும் உள்ளது. இந்த 4 அலுவலகங்களிலும் முதுநிலை அலுவலர்கள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள் என 180 பேர் பணியாற்றி வருகின்றனர்.

1 மணி நேர வேலைநிறுத்தம்

இவர்கள் அனைவரும் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். இதனால் ஆயுள் காப்பீட்டுக்கு தவணை தொகை வசூலிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் தவணை தொகை செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதில் திண்டுக்கல்லில், பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் பரத் தலைமை தாங்கினார். முதுநிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி தனபாலன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் முகவர்கள் சங்க நிர்வாகிகள் வேல்முருகன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து கோஷமிட்டனர்.

பழனி

இதேபோல் பழனியில், எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தின் பழனி கிளை தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டு எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும் கோஷங் களை எழுப்பினர். 

Next Story