ஊட்டியில், லாரி மோதி பெண் போலீஸ் படுகாயம்


ஊட்டியில், லாரி மோதி பெண் போலீஸ் படுகாயம்
x
தினத்தந்தி 5 Feb 2020 3:45 AM IST (Updated: 5 Feb 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் லாரி மோதிய விபத்தில் பெண் போலீசுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா (வயது 21) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை சேரிங்கிராசில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு சங்கீதா மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே அவர் ஒரு வாகனத்தை முந்தி சென்றார். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட்டில் மோதியது.

இந்த விபத்தில் மொபட் தூக்கி வீசப்பட்டதுடன், சங்கீதா சிறிது தூரம் தள்ளி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஹெல்மெட் அணிந்து இருந்ததால் உயிர் தப்பினார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் 8 தையல்கள் போடப்பட்டன. அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் சிக்கிய மொபட் பலத்த சேதம் அடைந்தது. விபத்தை ஏற்படுத்தியதாக கூடலூரை சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் (28) என்பவர் மீது ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story