தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மசாஜ்


தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மசாஜ்
x
தினத்தந்தி 5 Feb 2020 11:15 AM IST (Updated: 5 Feb 2020 11:55 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு மசாஜ் செய்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது. முக்கிய விழாவான தைப்பூசம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.

அவ்வாறு நடந்து செல்லும் பக்தர்களுக்கு சாலையோரங்களில் ஆங்காங்கே அன்னதானம், மோர், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட்டுகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல்-நத்தம் சாலையில் பொன்னகரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பக்தர்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் நீண்ட தூரம் பக்தர்கள் நடந்து வருவதால் அவர்களின் கால், பாதங்களில் வீக்கம், வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கால், பாதங்களில் வீக்கம், வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் பக்தர்களின் கால்கள், பாதங்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களின் கால்கள், பாதங்களில் தைலம், எண்ணெய் ஆகியவற்றால் தேய்த்து விடப்பட்டு மசாஜ் செய்யப்பட்டது. இவ்வாறு மசாஜ் செய்வதால் பக்தர்களால் நீண்ட தூரம் பாதயாத்திரையாக செல்ல முடியும் என்று ஓமியோபதி டாக்டர் ஒருவர் தெரிவித்தார். இந்த முகாமில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை, பாத மசாஜ் செய்யப்பட்டது.

Next Story