குடமுழுக்கிற்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் தஞ்சையில், 10 இடங்களில் 12 அடி உயர தலையாட்டி பொம்மைகள்


குடமுழுக்கிற்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் தஞ்சையில், 10 இடங்களில் 12 அடி உயர தலையாட்டி பொம்மைகள்
x
தினத்தந்தி 5 Feb 2020 12:52 PM IST (Updated: 5 Feb 2020 12:52 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகரில் 10 இடங்களில் குடமுழுக்கிற்கு வரும் பக்தர்களை வரவேற்க்கும் வகையில் பிரமாண்டமான 12 அடி உயர தலையாட்டி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே பொம்மையில் ராஜா, ராணி உருவம் இடம் பெற்றுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை என்றாலே நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மை தான். அந்த அளவுக்கு தலையாட்டி பொம்மை சிறந்து விளங்குகிறது. இந்த பொம்மையின் அடிப்பாகம் பந்து போன்ற வளைவான வடிவத்துடன் இருப்பதால் இந்த பொம்மையை எந்த பக்கம் சாய்த்தாலும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும்.

இந்த பொம்மைகள் பெரும்பாலும் 1 அடி உயரத்தில் காணப்படும். இந்த பொம்மைகள் ராஜா, ராணி என 2 விதமாக தயார் செய்யப்படும். இந்த பொம்மைகள் ஜோடி ரூ.150 முதல் விற்பனை செய்யப்படும். சிலர் உயரமான பொம்மைகள் வேண்டும் என்று கேட்டால் 5 அடி உயரத்தில் தயார் செய்து கொடுக்கப்படும்.

தற்போது பெரியகோவில் குடமுழுக்கையொட்டி பிரமாண்டமான தலையாட்டி பொம்மைகள் தயார் செய்யப்பட்டு தஞ்சை மாநகரில் 10 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது டேன்டெக்ஸ் ரவுண்டானா, மேம்பாலம் ரவுண்டானா, ராஜராஜசோழன் சிலை ரவுண்டானா என தஞ்சை மாநகருக்குள் நுழையும் இடம், முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கிற்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரே பொம்மையில் ஒருபுறம் ராஜா உருவமும், மற்றொரு புறம் ராணியின் உருவமும் இடம் பெற்றுள்ளன. இந்த பொம்மையின் அடிப்பாகம் 2 அடி உயரமும், அதற்கு மேல் 10 அடி உயரமும் என மொத்தம் 12 அடி உயரம் கொண்டது. தஞ்சை சுற்றுலா வளர்ச்சிக்குழுமம் சார்பில் இந்த பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா தலமான அரண்மனை வளாகத்தில் உள்ள மணிகோபுரம், அருங்காட்சியகம், தொல்காப்பியர் சதுக்க கோபுரம், மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தலையாட்டி பொம்மைகளை பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். கடந்த முறை தஞ்சை சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடந்த போது வாக்காளர்கள் ஓட்டுப்போட வலியுறுத்தும் வகையில் இது போன்ற பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story