நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி அண்ணன்-தங்கை பலி; 7 பேர் படுகாயம்


நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி அண்ணன்-தங்கை பலி; 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:30 AM IST (Updated: 5 Feb 2020 9:29 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அணைக்கட்டு, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 36). இவர் தனது மனைவி பவித்ரா (32) மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு புளியம்பட்டியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (30) என்பவர் ஓட்டினார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த சின்ன வெட்டுவாணம் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி சாலை ஓரத்தில் நின்றிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இவர்களின் கார் லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்தியராஜின் மனைவி பவித்ரா பரிதாபமாக இறந்தார். பவித்ராவின் அண்ணன் நாவரசு (38) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

காரில் சென்ற சத்தியராஜ், நாவரசுவின் தாய் செல்வி (50), குழந்தைகள் வி‌ஷால் (14), ஜெய்வி‌‌ஷ்ணு (7), தானியஸ்ரீ (5), ஸ்ரீதர்‌‌ஷனி (3), டிரைவர் அஜித்குமார் ஆகிய 7 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story