முறைகேடு எதிரொலி: தேர்வு மையங்களை கேமரா மூலம் கண்காணிக்கும் வசதி மருத்துவ பல்கலைக்கழகம் அமல்படுத்தியது


முறைகேடு எதிரொலி: தேர்வு மையங்களை கேமரா மூலம் கண்காணிக்கும் வசதி மருத்துவ பல்கலைக்கழகம் அமல்படுத்தியது
x
தினத்தந்தி 6 Feb 2020 4:15 AM IST (Updated: 5 Feb 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு முறைகேடு எதிரொலியால் தேர்வு மையங்களை கேமரா மூலம் நேரடியாக பல்கலைக்கழகத்தில் இருந்தபடியே கண்காணிக்கும் வசதி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை,

கடந்த ஆண்டு(2019) ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகளில், சில தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக புகார் மனு வந்தது. அதன் அடிப்படையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது. முறைகேடு நடந்த சில தேர்வு மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சில காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழு, சம்பந்தப்பட்ட அந்த தேர்வு மையங்கள் அமைந்து இருந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்தபடியே தேர்வு மையங்களை நேரடியாக கண்காணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌‌ஷய்யன் தெரிவித்தார்.

நேரடியாக கண்காணிக்கும் வசதி

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிப்ரவரி மாதத்துக்கான(2020) மருத்துவ படிப்பு எழுத்துத் தேர்வுகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் 37 கல்லூரிகளை சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் 35 தேர்வு மையங்களில் எழுதினார்கள். கடந்தமுறை நடந்த தேர்வுகள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்து, அவற்றை சி.டி.க்களில் பதிந்து தினந்தோறும் ஆய்வு செய்யப்பட்டன.

ஆனால் இந்த முறை 35 தேர்வு மையங்களிலும் ஒளிப்பதிவு கருவிகள் மூலம் தேர்வு நடைபெறுவதை பல்கலைக்கழக துணைவேந்தர் அறையிலேயே நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படுகிறது.

500 தேர்வு மையங்கள்

அடுத்துவரும் ஆண்டுகளில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கான தேர்வுகளை 500 தேர்வு மையங்களில் நேரடியாக கண்காணிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு சென்னை வர்த்தக சபை உதவி புரிந்து வருகிறது.

இந்த பணிகளை கவனிப்பதற்காக கண்காணிப்பு குழுவும், தனியாக கண்காணிப்பு அறையும் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியபடி செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் போ.ஆறுமுகம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் டாக்டர்கள் பு‌‌ஷ்கலா, கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story