வீரவநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: பெண்கள் உள்பட 31 பேர் கைது


வீரவநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: பெண்கள் உள்பட 31 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2020 4:45 AM IST (Updated: 6 Feb 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேரன்மாதேவி, 

வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கோவில்கள் அருகே கடந்த மாதம் 27-ந் தேதி புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்த கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து கடை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று நெல்லை-பாபநாசம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள், பள்ளிக்குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story