பெங்களூருவில் தாயை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் அந்தமானில் தலைமறைவாக இருந்த கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர், காதலனுடன் கைது பரபரப்பு தகவல்கள்
பெங்களூருவில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் அந்தமானில் தலைமறைவாக இருந்த கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர், காதலனுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்ஷய்நகர் 9-வது கிராசில் வசித்து வந்தவர் நிர்மலா (வயது 54). இவருக்கு அம்ருதா என்ற மகளும், ஹரீஷ் என்ற மகனும் உள்ளனர். அம்ருதா கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1-ந் தேதி இரவு தனது தாய், சகோதரருடன் சாப்பிட்டுவிட்டு அம்ருதா படுத்து தூங்கினார். அவருடன் தாய் நிர்மலாவும் படுத்திருந்தார். மற்றொரு அறையில் ஹரீஷ் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில், மறுநாள் (2-ந் தேதி) அதிகாலை 4 மணியளவில் எழுந்த அம்ருதா, தூங்கி கொண்டிருந்த தனது தாய் நிர்மலாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த ஹரீசையும் அம்ருதா கத்தியால் குத்திவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த நிர்மலா இறந்துவிட்டார். ஹரீசுக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அம்ருதாவை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள்.
அந்தமானில் தலைமறைவு
இதையடுத்து, அக்ஷய்நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அம்ருதா ஒரு வாலிபருடன் தனது வீட்டில் இருந்து ஒரு பையுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அம்ருதா சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலமாக போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபருடன், அம்ருதா மோட்டார் சைக்கிளில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு சென்று வாகன நிறுத்தும் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு, அந்த மோட்டார் சைக்கிள் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அந்த வாலிபருடன் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் அம்ருதா அந்தமானுக்கு சென்று தலைமறைவாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அம்ருதாவை கைது செய்ய கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பரீஷ் தலைமையிலான போலீசார் அந்தமானுக்கு விரைந்து சென்றார்கள்.
கைது
இந்த நிலையில், அந்தமான்-நிக்கோபார் தீவில் உள்ள போர்ட்பிளேயரில் ஒரு தங்கும் விடுதியில் அம்ருதா இருப்பது தெரியவந்தது. உடனே போர்ட்பிளேயர் போலீசாரின் உதவியுடன், அம்ருதாவையும், அவருடன் இருந்த வாலிபரையும் கே.ஆர்.புரம் போலீசார் கைது செய்தார்கள். அந்த வாலிபர் அம்ருதாவின் காதலனான ஸ்ரீதர்ராவ் என்று கூறப்படுகிறது. மேலும் அம்ருதா ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்ததும், அந்த கடனை கொடுக்க முடியாததால் தாய் நிர்மலாவுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதே நேரத்தில் அம்ருதா காதலித்து வரும் ஸ்ரீதர்ராவை நிர்மலாவுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவும் தாய், மகள் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அம்ருதா, ஸ்ரீதர்ராவை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என்றும், அப்போது கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பது தொியவரும் என துணை போலீஸ் கமிஷனா் அனுஜித் தெரிவித்துள்ளார். அம்ருதா, அவரது காதலன் ஸ்ரீதர்ராவை பெங்களூருவுக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story