விஷம் குடித்து பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


விஷம் குடித்து பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Feb 2020 3:45 AM IST (Updated: 6 Feb 2020 6:38 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் விஷம் குடித்து பெண் இறந்தார். இதனால் தற்கொலைக்கு தூண்டிய அவருடைய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கோவை சிங்காநல்லூர் நந்தா நகர் சாலை சாரதி தெருவை சேர்ந்தவர் சண்முகானந்தம் (வயது 35). இவருக்கும், சுஜாதா என்பவருக்கும் இடையே கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி திருமணம் நடந் தது. பின்னர் சண்முகானந்தம் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டது. இதனால் சுஜாதா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது மகளுடன் கோவை காந்திமாநகரில் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற சண்முகானந்தம் தனது குழந்தையை பெற்றோரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் அடிக்கடி அங்கு சென்று சுஜாதாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுஜாதா கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி கோவை நவஇந்தியா பஸ்நிறுத்தத்தில் சாணிப்பவுடர் (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார், சண்முகானந்தம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட சண்முகானந்தத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார்.

Next Story