ஊட்டி சுற்றுலா தலங்களில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஊட்டி சுற்றுலா தலங்களில் ஆடியோ ஒலிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி,
சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் இருந்து நீலகிரி மாவட்டம் திரும்பிய 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், மருத்துவர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தையொட்டி அமைந்து உள்ள நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டரின் அன்பான வேண்டுகோள் என்று தொடங்கும் ஆடியோவில், கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது. காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் ஆகியவை அதன் அறிகுறிகளாகும். பாதிப்புக்குள்ளான நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது.
தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் என்று முடிவடைகிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஆடியோ ஒலிக்கிறது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:- கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தையொட்டி உள்ள நீலகிரி மாவட்ட எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளுர், நம்பியார்குன்னு, பாட்டவயல் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் 5 மருத்துவ குழுவினர் முகாமிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. இதன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு, பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆடியோ ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story