செஞ்சி அருகே, ஏரியில் படகு கவிழ்ந்து தொழிலாளி சாவு
செஞ்சி அருகே ஏரியில் படகு கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள நங்காத்தூர் என்ற ஊரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடித்துக்கொள்ளும் உரிமையை ஏலம் மூலம் அதே ஊரைச்சேர்ந்த வேலுவும், அவரிடம் இருந்து பக்கத்து ஊரான பள்ளியந்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் செல்வராஜூம், பள்ளியந்தூரை சேர்ந்த மணிகண்டன், சரவணன், வெங்கந்தூரை சேர்ந்த தொழிலாளி ஏகாம்பரம்(வயது45) ஆகியோரும் ஏரியில் உள்ள மீன்களுக்கு இரை போடுவதற்காக நேற்று காலை 9-30 மணி அளவில் பிளாஸ்டிக் படகு மூலம் ஏரிக்குள் சென்றனர்.
அங்கு அவர்கள் மீன்களுக்கு இரை போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது நடு ஏரியில் திடீரென பிளாஸ்டிக் படகு கவிழ்ந்தது. இதனால் அவர்கள் கரைக்கு நீந்தி வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஏகாம்பரத்தின் லுங்கி முள்ளில் சிக்கிக்கொண்டதால் அவரால் நீந்திவர முடியாமல் மூழ்கினார். அவருடன் வந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியாமல் கரைக்கு திரும்பி வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சசுபதி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து ஏரிக்குள் படகில் சென்று ஏகாம்பரத்தை தேடினார்கள். சுமார் 4 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின்னர் ஏகாம்பரம் பிணமாக மீட்கப்பட்டார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story