பெட்ரோல் ‘பங்க்’ மேலாளர் படுகொலை: பிரபல ரவுடியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி பெட்ரோல் ‘பங்க்’ மேலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் கடலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை பெட்ரோல் ‘பங்க்’கில் உரிமையாளர் அறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த அறைக்குள் சென்று சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதோடு கண் இமைக்கும் நேரத்திற்குள் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு வெளியே தயார் நிலையில் நின்றுகொண்டிருந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டார். அவருடன் வந்த கூட்டாளிகளில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே அந்த கார், மோட்டார் சைக்கிளின் அடையாளங்களை குறிப்பிட்டு கொலையாளிகளை பிடிக்க கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனிடையே கொலையாளிகள், தாங்கள் பயன்படுத்திய காரை, திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூரில் நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதை அறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று கார் மற்றும் அதிலிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
மேலும் பெட்ரோல் ‘பங்க்’கில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையாளியின் அடையாளம் தெரிந்தது. அவர் விழுப்புரம் சண்முகபுரம் காலனியை சேர்ந்த அசார் (30) என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான அவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு என 10 வழக்குகள் உள்ளது. இதையடுத்து அசார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல் ‘பங்க்’ மேலாளர் கொலை வழக்கில் அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் வரை ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அசார், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க. நகர செயலாளராக இருந்த செல்வராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதாகி பின்னர் 2017-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2018 மார்ச் மாதத்தில் பெட்ரோல் ‘பங்க்’ உரிமையாளர் பிரகாசிடம் பணம் கேட்டு அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாட்களில் பிரகாசின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதற்கு பதிலாக வீடு தெரியாமல் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பிரகாசை தீர்த்துக்கட்ட அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் முடிவு செய்திருக்கலாம். சம்பவத்தன்று பிரகாசின் கார், பெட்ரோல் ‘பங்க்’ வளாகத்தில் நின்றுள்ளது. இதை பார்த்து தான் பிரகாஷ், உள்ளே இருக்கிறார் என நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று ஆள் தெரியாமல் அங்கிருந்த மேலாளர் சீனிவாசனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் பிரகாசிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதற்காகவும், அவரை அச்சுறுத்தும் வகையிலும் அவரது மேலாளரை கொலை செய்திருக்கலாம்? என்றும் சந்தேகிக்கிறோம். இந்த 2 கோணங்களிலேயே விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம்.
அதுமட்டுமின்றி அசார் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த இருசப்பனின் கூட்டாளி என்பதால் இந்த கொலை சம்பவத்தில் இருசப்பனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் அது உறுதியானால் இருசப்பன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக அசாரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அசார் பயன்படுத்திய காரின் உரிமையாளர் என 7 பேரை பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story