மந்தாரக்குப்பத்தில், கடைகளை அகற்ற வந்த என்.எல்.சி. அதிகாரிகளுடன் வணிகர்கள் வாக்குவாதம்
மந்தாரக்குப்பத்தில் கடைகளை அகற்ற வந்த என்.எல்.சி. அதிகாரிகளுடன் வணிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாமி படம் வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் சுரங்கம் 2 நுழைவு வாயில் அருகே கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இதன் அருகே 10-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளால் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு சென்று வர இடையூறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு சென்று வர இடையூறாக உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து அகற்றுவதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளிடம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு சென்று வர இந்த கடைகள் இடையூறாக இருப்பதாகவும், ஆகவே கடைகளை அகற்ற வந்துள்ளோம் என்று கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கடைகள் உள்ளது என்றும் உங்களுக்கு இந்த கடைகளை அகற்ற எந்த உரிமையும் இல்லை என்றும் கூறி என்.எல்.சி. அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைகளை அகற்ற வந்த என்.எல்.சி. அதிகாரிகளிடமும், கடை வியாபாரிகளையும் சமாதானப்படுத்தினர். இருப்பினும் கடை வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அடுத்துள்ள கடைகள் அருகே முருகன் சாமி உருவபடத்தை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் கடைகளை இடித்தால் பெரிய அளவில் வணிகர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் வியாபாரிகள் கூறினர். இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகள் கடைகளை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story