டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளில் போலீஸ்காரர் சித்தாண்டி பங்கு என்ன? பரபரப்பு தகவல்கள்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளில் போலீஸ்காரர் சித்தாண்டி பங்கு என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 Feb 2020 10:06 AM IST (Updated: 6 Feb 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளில் போலீஸ்காரர் சித்தாண்டியின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன.

சிவகங்கை,

கடந்த சில நாட்களாக குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேடு தொடர்பாக அடுக்கடுக்காக வெளிவரும் தகவல்களும், கைது நடவடிக்கைகளும் மாணவர்களையும், இளைஞர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன. உண்மையிலேயே படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும், அவர் உண்மையிலேயே அவ்வாறு மதிப்பெண் வாங்கி இருப்பாரா? என்று அவருடைய உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் சந்தேகப்படும் அளவுக்கு நிலைமாறி விட்டதாக தேர்வர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

100 சதவீதம் தூய்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டிய டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளில் இவ்வளவு பெரிய மோசடி நடந்ததில் முக்கிய புள்ளியாக கூறப்படுபவர் போலீஸ்காரர் சித்தாண்டி.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரியகண்ணனூர் கிராமத்தை சேர்ந்த அவர், நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மூலமாக மோசடியாக குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்ததாக அவருடைய தம்பி வேல்முருகனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் அரசு வேலை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சித்தாண்டி மனைவி சண்முகப்பிரியாவை தேடும் பணி ஒருபுறம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேடுகளில் போலீஸ்காரர் சித்தாண்டியின் பங்கு என்ன? என்பது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறப்படும் தகவல்கள் வருமாறு:-

சித்தாண்டி சிவகங்கை மாவட்டத்தில் முதலில் போலீஸ் பணியில் சேர்ந்தாலும், சென்னைக்கு அவர் இடம் மாறி சென்ற பின்புதான் முக்கிய புள்ளிகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அவர் சாதாரண போலீஸ்காரர்தான். அதில் போலீஸ் வாகனம் ஓட்டும் டிரைவராகத்தான் அதிக காலம் பணியாற்றி வந்துள்ளார். அவர் டி.என்.பி.எஸ்.சி.யில் உயர் பதவியில் இருந்தவர்களுக்கும், போலீஸ் துறையில் உயர் பதவியில் இருந்தவர்களுக்கும் வாகனம் ஓட்டி வந்துள்ளார். பொதுவாக சில முக்கிய அதிகாரிகளை சந்திக்கச் சென்றால் அனுமதி கிடைக்காது. எனவே அவர்களது உதவியாளரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவிப்பவர்களை கேள்விப்பட்டு இருப்போம். அது போல், சித்தாண்டி மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை வளைக்க முயன்றுள்ளனர்.

ஆரம்பத்தில் தனக்கு இருக்கும் பழக்கத்தால் ஒன்றிரண்டு பேருக்கு அரசுப்பணியை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என அடுத்தடுத்து அவர் மூலமாக உயர் அதிகாரிகள் சிலருக்கு பணத்தை கொடுத்துள்ளனர். அவ்வாறு பணம் கொடுத்தவர்களையும், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் சிலர் முறைகேடு செய்து வெற்றி பெற வைத்துள்ளனர். இப்படியே அவரைத்தேடிச் சென்ற புரோக்கர்கள், இடைத்தரகர்கள், பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள், உறவினர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. லட்சக்கணக்கில் புரண்ட பணம் பின்னர் கோடிக் கணக்காக மாறியது.

இந்த மோசடியில் என்றாவது சிக்கிவிட நேர்ந்தால், தனக்கு பின்னால் இந்த மோசடிக்கு துணையாக இருந்த அதிகாரிகள் தயவில் எப்படியும் தப்பிவிடலாம் என அவர் கணக்கு போட்டு வந்துள்ளார். சமீபத்தில் குரூப்-4 தேர்வு முறைகேடு அம்பலமாகத் தொடங்கியதும் அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு, மோசடிக்கு துணையாக இருந்த அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த விவகாரம் அடங்கியதும் மீண்டும் பணிக்கு வர எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தொடர்ந்து பலர் சிக்கிய வண்ணம் இருந்ததால் அவரால் தப்ப முடியவில்லை. பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோடிக்கணக்கில் பணம் புரண்டாலும் அதில் பெரும் தொகை சித்தாண்டி மூலமாகத்தான் உயர் அதிகாரிகளுக்கு கைமாறி இருக்கிறது. இதில் சித்தாண்டிக்கும் கணிசமான பங்கு கிடைத்துள்ளது. எப்போதெல்லாம் அவரது வங்கிக்கணக்கிற்கு பணம் வந்துள்ளது என்பதை அறியத்தான் அவர் உள்பட சிலரது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு போலீசார் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.

Next Story