4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு சிறை - ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு சிறை - ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Feb 2020 11:30 AM IST (Updated: 6 Feb 2020 11:19 AM IST)
t-max-icont-min-icon

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு,

கவுந்தப்பாடிபுதூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 74). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி மாலையில் கவுந்தப்பாடி பகுதியில் சைக்கிளில் சென்றார். அப்போது வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த 4 வயது சிறுமியிடம் சென்று மிட்டாய் வாங்கி கொடுப்பதாக பழனிசாமி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அவர் சைக்கிளில் கடத்தி வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் பாலியல் ரீதியாக சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அவரது பாட்டி தேடினார். அப்போது ஒருவர் சைக்கிளில் சிறுமியை அழைத்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பழனிசாமியின் வீட்டுக்கு சென்ற அவர் சிறுமியை மீட்டார்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பழனிசாமியை கைது செய்தனர். மேலும், அவர் மீது போலீசார் ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும், ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.

Next Story