தஞ்சை பெரியகோவிலில் சீமான்- இயக்குனர் கவுதமன் தரிசனம் - தமிழ், கோபுரம் ஏறி இருப்பது மகிழ்ச்சி என பேட்டி
தஞ்சை பெரியகோவிலில் சீமான், இயக்குனர் கவுதமன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள், தமிழ், கோபுரம் ஏறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தார். அவர் பெருவுடையார் மற்றும் முருகன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோபுர கலசத்தில் எங்கள் சிவனடியார்கள் ஏறி தமிழிலேயே குடமுழுக்கு செய்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இது உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
இனி வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். சிவாச்சாரியார்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஓதுவார்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று கேட்கிறீர்கள். இது எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. இதற்காக நாங்கள் எவ்வளவோ போராடி உள்ளோம்.
இருப்பினும் இது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று தான் நாங்கள் கூறினோம் 5 நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று தான் அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
அரசு சொல்கிறது, செய்வார்கள் என்று நினைத்தோம். அது ஏன் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. இது தொடர்பாக வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சி நிறுவனருமான கவுதமன், சத்யபாமா அறக்கட்டளை நிறுவனர் சத்யபாமா, தெய்வத்தமிழ் திருமுறை வழிபாட்டு இயக்கத்தை சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர் தஞ்சை பெரியகோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கவுதமன் கூறுகையில், தமிழ் கோபுரம் ஏறி இருப்பது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. தமிழில் மட்டுமே யாகம், பூஜைகள், குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இது தொடர்பாக தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.
Related Tags :
Next Story