திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடக்கிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13–ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவண்ணாமலை மாவட்ட பிரிவு சார்பில் 2019–2020–ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வருகிற 13 மற்றும் 14–ந் தேதிகள் என 2 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி நிலவரப்படி 25 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடையடையாத ஆண் மற்றும் பெண்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
மேலும் தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இருப்பிட சான்றிதழ் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 12–ந் தேதிக்குள் (புதன்கிழமை) பெயரினை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயர் பதிவு செய்ய வரும் போது இருப்பிட சான்று, வயது சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே மாநில அளவிலான முதல்–அமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
13–ந் தேதி (வியாழக்கிழமை) கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி, ஆக்கி, டென்னிஸ், இறகுபந்து, ஜூடோ, குத்து சண்டை போட்டிகள் நடக்கிறது.
14–ந் தேதி (வெள்ளிக்கிழமை) தடகளம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளது.
மேலும் இது குறித்த தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். அல்லது 04175233169, 7401703484 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story